எழுத்து எனது சுயதேடல்...
எழுத்து எனக்கு
கிடைத்ததொரு சந்தோஷம். எனது சுயதேடல். ஒவ்வொரு கதையை முடித்த பின்பும் எனக்கொரு நிம்மதி
கிடைக்கிறது. என் வார்த்தைகளை அர்த்தப்படுத்தி விட்டதாக ஒரு நிறைவு கிடைக்கிறது.
மைனாவில் நெருஞ்சியும்,கோரைகளும்
குத்திக் கிழித்தெடுக்க, ஊர் பெண்களின் உதைகளையும் வாங்கி ஓடும் முனியும், மைனரும்
வெறும் கதையின் மாந்தர்கள் மட்டுமல்ல.
கனாக்கண்டேன்
தோழியில் சொர்க்கத்திலிருந்து எட்டிப் பார்ப்பதைப் போல தேரின் உச்சியிலிருந்து முகம்
காட்டும் தெய்வங்களை தரிசிக்கும் சேஷாத்திரியும் வேறு யாருமல்ல.
மூட நம்பிக்கைகளின்
மீதான வெறுப்பும், உண்மை பக்தியின் மீதான எனது காதலுமே இவ்விரண்டு கதைகளில் வரும் இக்கதை
மாந்தர்கள்.
நாச்சம்மை வீடு என்றொரு கதை இதிலுள்ளது. சிறுவயதில்
அப்படியொரு அழகான வீடு எங்கள் கண் முன்னேயே எங்களின் கையை விட்டுப் போன சோகம்தான் அந்த
கதை. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான என்தாய் மருத்துவமனையில் சிலகாலம் நோயாளியாகக் கிடந்தார்.
ஆற்றமுடியாத கவலைகளும்,
ரணங்களும் நம்மைப் போலவே ஒத்த சிந்தனைகளுள்ள ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்ளும்போது
சற்றே குறையும். ஒரு நல்ல நண்பனைப் போல எனக்கான ஆறுதல்களையும், சந்தோஷங்களையும் என்
எழுத்து எப்போதும் எனக்கு தந்துகொண்டுள்ளது.
ஆம். இந்த பதிவுகளால்
என் வார்த்தைகள் மட்டுமல்ல, என் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகியுள்ளது.
1. கனாக் கண்டேன் தோழி...
- கார்த்திகேயன் சுகதேவன்
ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடைத்தெருவில் வடபத்ரசாயி
கோபுரத்துக்கு எதிரில் சத்யாவின் வீடு.
பத்து வயதில் “ஏன் பாட்டீ ஆண்டாளும் ரெங்கமன்னாரும்
ஆடியிலே தேரில வர்றாங்க…”, என்பாள் சத்யா.
“லோகத்திலே உள்ள மனுஷாள்லாம் க்ஷேமமா இருக்காளான்னு பார்த்து நலம் விசாரிச்சுட்டுப்
போகத்தாண்டீ குழந்தே அவா ஆடியிலே தேரிலே வர்றா…”, என்பாள் பாட்டி ரங்கநாயகி.
“அப்போ தேரில வலம் வர்ற அவாகிட்ட, நாங்க
இப்போ க்ஷேமமா இல்லை… எங்க அப்பா நிறைய குடிக்கிறா… எங்க அப்பாவுக்கு நல்ல புத்தி கொடுங்கோன்னு
நான் கேட்டா ஸ்வாமி அனுக்ரஹம் பண்ணுவாரா..”
“ஓ... பண்ணுவாரே... பேஷா பண்ணுவார்... நன்னா
வேண்டிக்கோ... கண்டிப்பா நல்லவழி காண்பிப்பார்...”, என்பாள் பாட்டி.
பாட்டி இறந்து வெகு காலமாகிவிட்டது. இன்னமும்
சத்யா பாட்டி சொன்னதுபோல வேண்டிக் கொண்டுதானிருக்கிறாள். ஆனால் பகவான் இன்னமும் அவள்
வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லைதான்.... அவள் விண்ணப்பத்துக்கு கண் திறக்கவில்லைதான்...
இருந்தாலும் சத்யாவுக்கு நம்பிக்கை இருக்கிறது...
அப்பா சரியாவாரென்று....
அவரது கண்ணையும் பகவான் திறந்து வைப்பாரென்று....
”கனவு இல்லாத உயிர் ஜடம்தான் சத்யா... கனவு
காணணும்... அதுதான் வாழ்க்கைக்கு பலம் தரும். எந்த நம்பிக்கையில் மதுசூதன் வருவான்...
கைத்தலம் பற்றுவான்னு கோதை நாச்சியார் கனவு கண்டா... ஆனா அவ கனவு பலிக்கலையா..?. அவளோட
கனவு இன்று கொண்டாடப்படலையா... உன் பாட்டி சொன்னது போல உன் தோப்பனாருக்கும் நல்ல புத்தி
வரும்டிம்மா... அதுதான் என்னோட கனவும் கூட... ” என்பாள் அம்மா.
பாட்டியும், அம்மாவும் கண்ட கனவு யுக, யுகாந்திரங்களையும்
கடந்த பல பெண்களின் பலிதமாகாத கனவாக இருக்கலாம்...
பலிக்காது பாழாய்ப் போன பழம்கதைகளாகக் கூட
இருக்கலாம்....
ஆனால், கனவுகளில் லயித்து... கனவுகளையே ருசித்து...
கனவுகளையே சுவாசித்து... கனவை ஜெயித்தவளான ஆண்டாளை வணங்கும் போது தங்களது கனவும் பலிக்காமலா
போய்விடும்....
ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தில்தான்
வருடா வருடம் தேரோட்டம் நடக்கும்.
நாளை பூர நட்சத்திரம்...
எல்லே... இளங்கிளியேயென மைத்துனன் நம்பி
மதுசூதன் வந்து கைத்தலம் பற்ற கனாக் கண்டவள் தன் மணாளனுடன் நாளை ஆடித் தேரில் பவனி
வருவாள்.
கனவு பலித்த களிப்பில் வலம் வருபவள், கேட்டவர்க்கெல்லாம்
கேட்டதைக் கொடுப்பாளாம்... கேட்காமலும் வேண்டியதைத் தருவாளாம்..
இந்த வருடத்திலாவது தங்களது கனவையும் ஜெயிக்க
வைக்காமலா போவிடுவாள் அவள்.
குளித்து முடித்து, சாப்பாடு எடுத்துக்கொண்டு,
அலுவலகத்துக்கு கிளம்பும் போது கிழக்கு ரத வீதியில் புறப்பாட்டுக்குத் தயாராக நின்றிருந்தது ஆடித்தேர். சத்யாவுக்கு அந்த தேரைப்
பார்த்ததும் மனதுக்குள் ஏதோவொரு தைரியம் உண்டானது. விளக்கு ஏற்றியதும் தெறித்து ஓடும்
இருட்டைப்போல கவலைகள் இருந்த இடம் தெரியாமல் பறந்தது.
நாளைய தினம் ஒட்டுமொத்த ஸ்ரீவில்லிபுத்தூரும் கோலாகலத்தில்
திளைத்து மகிழப் போகிறது. பக்தியையும், சந்தோஷத்தையும் வாரியிறைக்கப் போகிறது.
சொல்லில் அடக்கி விட முடியாது அந்த தேர்த்திருவிழாவை...
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு ரத வீதிகளிலும் ஸ்வாமி தேரில் எழுந்தருளுவார்...
பாட்டி சொன்னது போல அத்தனை மக்களையும் பார்த்து அவர் அன்போடு நலம் விசாரிப்பார். பஜனையும்,
கோலாட்டமும், கும்மியும் வரவேற்க ஆஜானுபாகுவான உயரத்தில் நிற்கும் தேரை கணக்கிலடங்கா
சனம் வடம்பிடித்து இழுத்து வரும்... தெருக்களிலெல்லாம் புதிது, புதிதாகக் கடைகள் முளைக்கும்.
பத்து கிலோ, இருபது கிலோவென பால்கோவாக்கள் விற்பனையில் ஜொலிக்கும். நாராயணா.... நாராயணா...
என்ற கோவிந்த நாம சங்கீர்த்தனம் அவ்வூரின் எட்டு திக்கும் விண்ணை முட்டும். அச்சப்தத்தை
கேட்ட மக்கள் சொர்க்க வாசலில் நுழைந்ததாக லயித்துப் போவார்கள். அந்த கோஷத்தில் நெக்குருகித்
திளைப்பார்கள்.
சத்யாவுக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது
இருக்கும். இப்போது போல அப்போது ’ புல்டோசர் ’ வைத்துத் தள்ளி ஒரே நாளில் முடிக்க மாட்டார்கள்
இந்த தேரோட்டத்தை. பக்தர்கள் ஒன்று கூடி வடம் பிடித்து இழுக்க அங்குலம் அங்குலமாக நகரும்
இந்த தேர். முடியாத பட்சத்தில் நெம்புதடி கொண்டு ஒரு கூட்டம் தேரை நகர்த்தும்.
அப்படியும் இழுக்க முடியாத தேர் ரத வீதிகளில்
ஆங்காங்கே ஓரிரு நாள் நின்று இளைப்பாறிச் செல்லும். அப்படி தேர் இளைப்பாறிச் செல்லும்
இரவுகளில் கருத்துப் பெருத்த மதயானையைப் போல நிற்கும் அந்த தேருக்கு அடியில் சிறுவர்களெல்லம்
ஒன்று கூடி விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டு… தேரின் வடத்தில் ஏறி உட்கார்ந்து
கொண்டு ஜங்கு, ஜங்கென்று குதித்துப் போடும் ஆட்டம்… ஆண்டாளையும் ரெங்கமன்னாரையும் மரப்பாச்சி
பொம்மைகளாக அட்டைப் பெட்டியில் வைத்து தேரோட்டம் நடத்திய விளையாட்டு… இவைகள் அனைத்திலுமே
சத்யாவும் இருந்திருக்கிறாள்.
ஆனால் அவளோடு அப்போது ஆடிப்பாடி விளையாடிய
குழந்தைகளெல்லாம் இப்போது நல்லபடியாக குடும்பம், குழந்தைகளென்று செட்டிலாகி விட்டார்கள்.
சத்யாதான் அவள் தகப்பனாரின் கெட்ட பழக்கத்தினாலும், பொறுப்பின்மையினாலும் இன்னமும்
செட்டிலாகவில்லை.
தனியார் வங்கி ஒன்றின் கிளை அலுவலகம் அது.
அங்குதான் சத்யா பணிபுரிகிறாள். அலுவலகத்துக்குள் நுழைந்த சத்யா ”அப்பாடா…” என தன்
இருக்கையில் சாய்ந்தாள்.
“என்ன சத்யா அப்பாடான்னு சரிஞ்சு உட்கார்ந்துட்டே…”
என்றாள் அவள் அலுவலகத் தோழி ரம்யா.
சத்யா பதிலேதும் பேசவில்லை.ஒரு சிரிப்பை
மட்டும் உதிர்த்தாள்.
“அழகுடீ உன் சிரிப்பு… எந்த மதுசூதன் வந்து
உன்னை தூக்கிண்டு போகப் போறானோ…”என்றாள் ரம்யா.
“போவான், போவான்… முள்ளங்கிப் பத்தையா மூனு
லட்சம் வச்சப்புறம்தான் என் நாத்தனாரே என் பொண்ணை தன் புள்ளைக்கு ஒத்துண்டா… இவ அப்பா
அடிக்கற லூட்டிக்கு மதுசூதன் வருவான்… கைத்தலம் பற்றுவான்னு இவளும் ஆண்டாளாட்டம் கனவு
கண்டுட்டே உட்காற வேண்டியதுதான்” என்றாள் அருகிலிருந்த கேஷியர் மாமி.
“ஏன் மாமி அவ வந்ததும் வராததுமா இப்படி தப்பாப்
பேசறேள்…”, என்றாள் ரம்யா.
“சேச்சே… அவ என் குழந்தையப் போலடீ… அவளைக்
காயப்படுத்த நினைப்பேனா… நான் உள்ளதைச் சொன்னேண்டீ….” என்றாள் கேஷியர் மாமி.
சத்யா அப்போதும் பதிலேதும் பேசவில்லை. ஒரு
சிரிப்பை மட்டும் உதிர்த்தாள்.
”அவ சொன்னது உண்மைதாண்டீ குழந்தே… கொள்ளை
அழகுடீ உன் சிரிப்பு…” என்றாள் கேஷியர் மாமி.
அவள் மட்டுமல்ல... அவள் குடியிருக்கும் கந்தாடைத்
தெருவும் அழகு... வீட்டு வாசலில் நின்றபடியே தரிசிக்கத் தோதுவாய் அமைந்த வடபத்ரசாயி
கோவிலின் கோபுரமும் அழகு...
தமிழக அரசு சின்னத்தில் இடம்பெற்ற கோபுரமும்கூட
இதுதான்.
திருமணமாகி கணவன் வீட்டுக்குப் போய்விட்டால்
தினமும் காலையில் தரிசிக்க அந்த கோபுரமில்லாமல் போய்விடுமோவென பலமுறை கவலைப் பட்டிருக்கிறாள்.
அதற்காக திருமணமே ஆகாமல் இப்படியே இருந்துவிட்டால் கூட பரவாயில்லையெனத்தான் அவள் அடிக்கடி
நினைப்பாள். ஆனால், உடனிருக்கும் இந்த கேஷியர் மாமி போன்ற நலம்விரும்பிகள்தான் இப்படி அவள் கல்யாணத்தைப் பற்றியே
அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள்.
என்ன செய்வது... முதிர்கன்னியாய் காலம் தள்ளுவதற்காக
எதிர்த்துப் போராட வேண்டியது வயதுப் பிரச்சினைகளை மட்டுமா... சமூகத்தையும்தானே...
இருக்கையில் அமர்ந்ததும் அன்றாட அலுவலைத்
தொடர்ந்தாள் சத்யா. காசோலையை போட்டு பணம் எடுக்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்தும்;
கேஷ் டெபாசிட் செய்ய வந்தவர்களுக்கு டெபாசிட் ஸ்லிப் கொடுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளராக
மாமியிடம் அனுப்பி வைத்தாள். பணம் எடுக்க வந்தவர்களுக்கும், செலுத்த வந்தவர்களுக்கும்
மாமியே டெபிட் அண்ட் க்ரெடிட் என்ட்ரியும் போட்டு பணப்பட்டுவாடா செய்து அனுப்பினாள்.
அக்கவுண்ட் சம்பந்தமாக சந்தேகம் கேட்டு வந்தவர்களுக்கு இடையிடையே ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்தாள்.
வேலை சிரமமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் வந்தான்.
அட்டைப் பெட்டி தேரோட்டம்… தேரின் வடத்தில்
ஏறி உட்கார்ந்து ஆடும் குதிரை சவாரி ஆட்டம்… கள்ளன் போலீஸ் விளையாட்டு… இவைகள் எல்லாவற்றிலும்
அவளோடு சேர்ந்து விளையாடிய அவளது பால்ய வயது சினேகிதன் சேஷாத்திரிதான் அது. அவள் குடியிருக்கும்
அதே தெருவில் கோபுரத்துக்கு வலப்பக்கம் இவள் வீடென்றால், இடப்பக்கம் அவன் வீடு. கையில்
ஒரு தடி, கண்ணுக்கு கருப்பாக மூக்குக் கண்ணாடி, மடிப்பு கலையாத அரைக்கை சட்டை, கீழே
தொள, தொளவென்று ஒரு கால் சராய் சகிதமாக வந்து நின்றிருந்தான்.
பார்த்த மாத்திரத்திலேயே அவன் பார்வையற்றவனென்பதைத்
தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறுவயதிலேயே அவனுக்கு கண்பார்வை குறைவுதான்.
எதுவும் மங்கலாகத்தான் தெரியும். மாலை நேரத்தில் அது சற்று அதிகமாகிவிடும்.
முன்பே சொன்னது போல நெம்புதடி கொண்டும் நகர்த்த
முடியாது இரவு நேரத்தில் ரத வீதிகளில் இளைப்பாறும் தேரிலிருக்கும் ஸ்வாமிகளுக்கு பெட்ரோமாக்ஸ்
விளக்கொளியில் பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் சுற்றியிருக்கும் வேறு எதுவும் தன்
கண்களுக்கு சரியாகத் தெரியவில்லையெனச் சொல்லும் சேஷாத்திரி, உயரமாக தேரின் மீது பெட்ரோமாக்ஸ்
விளக்கொளியில் பூஜையிலிருக்கும் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் மட்டும் சொர்க்கத்திலிருந்து
எட்டிப் பார்ப்பது போலிருப்பதாகச் சொல்லுவான்.
பாவம். இப்போது அவனது கண்பார்வை முற்றிலுமாகப்
போய் விட்டதாம். வடக்குரத வீதியில் முன்பு சுந்தரம் காஃபே இருந்த இடத்துக்கு அருகே
எஸ்டிடி பூத் வைத்து நடத்திக் கொண்டிருந்திருக்கிறான் போல. இப்போது கை பேசி அதிகமாகிவிட்டதால்
வரும்படி அவ்வளவாக இல்லையாம். பூத் இருந்த இடத்தில் ஒரு மளிகைக்
கடை வைப்பதற்கு லோன் கேட்டு வந்திருந்ததாக சத்யா அருகே அழைத்து விசாரித்த போது சொன்னான்.
“சாதரணமா உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்
அக்கௌண்ட் ஓப்பன் பண்றதுக்கே ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கு இங்கே… உனக்கு லோன்
தருவாங்களா, இல்லையான்னு என்னாலே அவ்வளவு உறுதியா சொல்ல முடியாது சேஷூ…” என்றாள் சத்யா.
“சரி பரவாயில்லை… எங்களைப் போன்றவங்களுக்கு
லோன் தர்றதுக்கும் சில நிறுவனங்கள் இருக்கு… நான் அங்கே போய் முயற்சி பண்ணிக்கறேன்…”
என்றான் சேஷாத்திரி.
அவனொன்றும் இல்லாதவனில்லை. அவன் தோப்பானார்
ஹிண்ட் ஹை ஸ்கூலில் சயன்ஸ் வாத்தியாராக இருந்து நிறைய காசு சேர்த்து வைத்துள்ளார்.
அந்தக் காலத்திலேயே அவர் புல்லட்டில்தான் பள்ளிக்கு வருவார். அவ்வளவு செல்வாக்கான மனிதர்
அவர். ஆனால் பசங்கதான் அவருக்கு புள்ளிக் கோவிந்தனென்று செல்லமாக பெயர் வைத்து ரகசியமாக
சொல்லி மகிழ்வார்கள். முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாக அம்மைத் தழும்போடு, அவ்வளவு எளிமையாக...
அனாயசமாக பாடம் நடத்தும் நல்ல ஆசிரியர் அவர். அவர் சேர்த்துவைத்த சொத்து, பத்துகளிருக்கும்
போது அவனுக்கு இந்த வங்கி உதவிப் பணம் ஒன்றும் பெரிதாகத் தேவையேயில்லைதான்.
ஆகவே வங்கி உதவாவிட்டாலும் அவனுக்கு அதனால்
எந்த இழப்பும் வரப் போவதில்லை. எனவே அக்கவலையை விட்டு அடுத்து பேச ஆரம்பித்தாள் சத்யா.
"இது பிறவியிலேயே ஏற்பட்ட பிரச்சனையில்லையே...
சரியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாயிடுமே சேஷூ...”.
“உண்மைதான். ட்ரீட்மெண்ட் கொடுக்க அப்பா
நிறைய காசு சேர்த்து வச்சுருக்கார். ஆனா, இருந்து கொடுக்கத்தான் அவரில்லாம போயிட்டாரே.
அம்மாவுக்கும் உடம்பு அவ்வளவு சுகமில்லை... இதிலே எப்படி நான் ட்ரீட்மெண்டுக்குப் போறது...
சொல்லு...”
“ரிலேட்டிவ்ஸ்...?”
“அக்காவும், அத்திம்பேரும் இருக்கா... எனக்கு
சரியாயிட்டா வரப் போற சொத்திலே அவாளுக்கு ஒரு ஷேர் குறைஞ்சுடுமோல்லியோ...”
“அட நாராயணா... இப்படியும் இருப்பாளா...:
“அக்கா அழத்தான் செய்யுறா...ஆனா அவ மட்டும்
என்ன செய்வா...”
“
............................................................... “
“ நம்ம ஃப்ரெண்ட்ஸ் மகேஸ்வரி, கோமதி, பொன்ராசு,
நாகராசெல்லாம் எப்படி இருக்காங்க… நீ சமீபத்துல அவங்களை பார்த்தியா… சௌக்கியமா இருக்காங்களா…
“ என்றான்.
“ம்ம்.. பார்ப்பேன்… மகேஸ்வரி எங்க பேங்கிலே
அக்கௌண்ட் ஹோல்டர். அடிக்கடி இங்கே வருவா… அவ பையன் ஃபோர்த் படிக்கறான்… உன்னைப் பற்றிக்
கூட கேட்பாள்… ஆனா வொர்க்கு பிஸியிலே ரொம்ப நேரம் அவளோட பேச முடியாது…” என்றாள்.
“நீ எங்கே... பத்துவீடு தள்ளியிருக்கற என்னைப்
பற்றியே பேங்குல வச்சுத்தான் விசாரிக்கிறே...”
“என்னடா சேஷூ பண்றது... வீட்டுக்குப் போனா
பேங்க் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பரேஷன்... இங்க வந்தா சொந்த வேலை எதையும் கொஞ்சமும் யோசிக்க
முடியாதபடிக்கு வேலை... அப்படியே எதாவது டைம் வேஸ்ட் பண்ணினாலும் மேனேஜர் கூப்பிட்டு
திட்டுவார்...”, என்றாள்.
ஆனால், அவன் அது தனக்காகவே சொல்லப்பட்டதோவென
சட்டென சுதாரித்துக் கொண்டான்.
“சாரி..சாரி… வொர்க்குல பிஸியா இருப்பே…
உன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது… நான் கிளம்பறேன்…” என்றான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை… பிஸி ஷெட்யூல்னுதான்
சொன்னேன். உன்னைப் போகச் சொல்றதுக்காகச் சொல்லலை…”என்றாள்.
அவளது அலுவலகத் தோழி ரம்யா அவளையும் அறியாமல்
சப்தமாக சிரித்துவிட்டாள், அவர்களது அந்த சம்பாஷணையக் கேட்டு.
கேஷியர் மாமியும் கூட தன் பணியை மறந்து
“என்ன?..” என்பது போலப் பார்த்தாள்.
ஆனால் அப்படியே அவன் கிளம்பி விட்டால் கூடத்
தேவலை.” நீ எப்படி இருக்கிறே… உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கறாளா… எப்போ கல்யாணம்…”
என்று கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என சத்யாவுக்கு அந்த ஹாஸ்யத்தை ரசிக்க முடியவில்லை.
மனம் விட்டு சிரிக்க முடியவில்லை.
“வாயினால் பாடி மனதினால் துதிக்க… போய பிழையும்
புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
செப்பேலோரெம்பாவாய்…” என்று முணு,முணுத்தாள்.
“என்ன முணு,முணுக்கிறே…”
“ஒன்னுமில்லை… திருப்பாவை… கஷ்டமான நேரத்திலேயெல்லாம் சொல்லிப்பேன்…”
“ம்ம்… அப்படின்னா இப்போ எதாவது கஷ்டமாயிடுச்சா…”
“இல்லை சேஷூ … ஒரு என்ட்ரி தப்பாப் போட்டுட்டேன்…”
“அடடா… என்கூடப் பேசிக்கிட்டே நீ தப்பு விட்டுட்டியா…”
“அதெல்லாம் ஒன்னுமில்லை… சரி சேஷூ … உனக்கு
எதாவது செய்ய முடியுமான்னு அப்புறமா மேனேஜரைக் கேட்டு ஃபோன்ல சொல்றேன்…” என்றாள்.
“சரி…” என்றான் சேஷாத்திரி.
“ஒகே..”என்றாள், புறப்படு என்பதைச் சொல்லாமல்
சொல்லும் விதமாக.
ஆனால் அவன் “அப்புறம் ஒரு விஷயம்…” என்றதும்
பதைத்துப் போனாள், அடுத்து அவன் தன்னைப் பற்றித்தான் கேட்கப் போகிறானோ… என்ற நினைப்பில்.
ஆனால் அவன் அவளைப் பற்றி விசாரிக்கவில்லை.
அவளுக்கான அந்த தகவலை மட்டும் சொன்னான்.
“சேவையைச் செய்து தேவையைப் பூர்த்தி செய்யத்தான்
இந்த மாதிரி மையங்கள்... அதை சரியா செய்தாலே நல்லா வரலாம் சத்யா. ஆனா அதையெல்லாம் விட்டுட்டு
பிஸினசை டெவலப் பண்ண ஏகப்பட்ட எக்ஸிக்யூட்டிவ்கள்… ஏகப்பட்ட ஃபோன், எஸ்எம்எஸ் கேன்வாஷ்கள்…
அதை பண்றவாளுக்கு ஊதியங்கள்ன்னு நிறைய செலவு
பண்றாங்க… எதுக்கு இதெல்லாம். நம்மோட வாழ்க்கை கூட அப்படித்தான் சத்யா… நாலு பேருக்கு
நல்லது செய்ததுக்கு அப்புறமாத்தான் நாமளும் நமக்கு
நல்லது நடக்கணும்னு எதிர்பார்க்கணும்… ஆனா யார் செய்யறா… “என்றான்.
பொட்டிலடித்தது போலிருந்தது அவன் சொன்னதைக்
கேட்டதும். அவளுக்கான ஏதோ ஒரு சங்கதி அந்த வார்தைகளில் இருந்ததை அவளால் உணர்ந்து கொள்ள
முடிந்தது.
என்ன ஒரு அற்புதமான வார்த்தை… இவனுக்கா கண்ணில்லை…
எத்தனை விஷயங்களைப் பார்த்து வைத்துள்ளான்… எவ்வளவு தெளிவாகப் பேசுகிறான்.
மூலப்பிரக்ருதியாக மேலிருந்து காப்பவன் விரித்து
வைத்துள்ளான் எல்லாவற்றையும். தெரிந்து கொள்ளத்தானே ஐம்புலன்களையும் கொடுத்தான். பார்க்காது
போய் விட்டோமே…
சத்யா சிலையாகிப்போனாள்.
“என்ன சத்யா… நான் சொல்றது சரிதானே…?” என்று
அவளை உசுப்பியது சேஷூவின் அடுத்த கேள்வி.
“ம்ம்…”என்றாள் ஒற்றையாக.
“சரி வர்றேன் சத்யா… “எனக் கிளம்பினான் சேஷூ.
அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்ல
சத்யாவுக்கு.
ஏன் அப்படி செய்யக் கூடாது...
அவனொன்றும் பிறவி ஊனமில்லையே....அவன் ஊனத்தைப்
போக்கிக் கொள்ள உதவி செய்ய ஆளில்லாமல்தானே தவிக்கிறான்.
பரந்து கிடக்கும் நீர் பிரவாகத்தில் எனக்கு
குடிநீர் கிடைக்கவில்லையென ஒரு நண்பன் புலம்புவதை எப்படி கேளாமல் போகலாம்.
ஒரு பிடி அவலுக்காக தன் நண்பனின் வாழ்வையே
மாற்றினானே பரந்தாமன்...
நட்பு எவ்வளவு புனிதமானதொரு விஷயம்....
என் நணபன் தவிக்கும் போது சேவையாற்றத் தெரியாத
நான் எப்படி என் கனவு பலிக்க ஆண்டாளிடம் கேட்கலாம்...
“கொஞ்சம் இரு சேஷூ …”என்றாள் சத்யா.
“என்ன?..”
“நீ கல்யாணம் பண்ணிக்கலாமே... மனைவி வந்து
உன்னை பார்த்துப்பாளே... ”
“எனக்கு கூட ஆகுமா சத்யா… இருட்டில நிக்கற
நான் இன்னொரு ஜீவனுக்கு எப்படி வெளிச்சம் காட்ட முடியும்… என்னோட சுய நலத்துக்காக பிறத்தியாரையும்
இருட்டிலே கொண்டுபோய் நிறுத்தலாமா... அது மகா பாவமில்லையா...”
யார் இருட்டில் உள்ளார்கள். இருளென்பது குறைந்த
ஒளியே. நல்லது செய்து, நல்லதே நினைக்கும் இடத்தில் எங்கிருந்து வரும் காரிருள்.
“ நல்லதைச் செய்து நல்லதை எடுத்துக்க நான் தயாராயிட்டேன் சேஷூ… உனக்கு வெளிச்சம் காட்டி
பார்வை கொடுக்க எனக்கு சம்மதம். உனக்கு சம்மதமா?...” என்றாள்.
சேஷூ வாயடைத்துப் போனான். சத்யாவின் தகப்பனார்
பற்றியும், அதனால் அவள் இன்னமும் திருமணமே ஆகாமல் இருப்பதும் அவனுக்கு முன்பே தெரியும்.
அதற்காக அவள் இப்படி எடுத்தோம், கவிழ்த்தோமென்று பேசியிருப்பாளோ…
யார் மீதோ இருக்கும் கோபத்துக்கான தண்டனையை
தன் தலையில் போட்டுக் கொள்கிறாளோ… என யோசித்தான். ஆனால் அவன் யோசித்ததற்கு பதில் சொல்லும்
விதமாகவே அவள் மேலும் சொன்னாள் -
“உண்மையாச் சொல்றேன்… இயலாமையாலோ..., வேற
யாரு மேலயோ உள்ள கோபத்தினாலோ நான் இந்த முடிவை எடுக்கலை… இது சுயமா எனக்கு
நியாயம்னு பட்ட முடிவு… உனக்கு சம்மதமா சொல்லு…” என்றாள்.
கேஷியர் மாமியும், அலுவலகத் தோழி ரம்யாவும்
உறைந்து போய்ப் பார்த்தார்கள்.
கேஷியர் மாமி அப்போதும் “பாவம் இந்த குழந்தை…”
என்ற பார்வையைத்தான் பார்த்தாள். சத்யாவின் தோழி ரம்யாவும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான்
நினைத்தாள். ஆனால் சத்யா அப்படி நினைக்கவில்லை. மிகத் தெளிவாகவே அடுத்து பேச ஆரம்பித்தாள்.
மறுவருடம் அதே பூர நட்சத்திரத்தில், பாவை
பாடிய பாவை பிறந்த புண்ணியஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆடித்தேர் வீதியில் உலா வந்தது.
சேஷூவுக்கு பார்வை கிடைத்தாயிற்று. தான்
செய்த தவறுகளால்தான் தன் மகளுக்கு இப்படி ஆகிவிட்டதோ என்ற குற்ற உணர்வில் சத்யாவின்
தோப்பனாருக்கும் கூட எப்போதோ நல்ல பார்வை கிடைத்திருந்தது. இவ்வருடமும் ஆடியில் வீதியில்
உலா வந்த ஆண்டாளும் ரெங்கமன்னாரும் இப்போது சத்யாவின் தோப்பனாரையும் சொர்க்கத்திலிருந்து
எட்டிப் பார்ப்பதைப் போல தேரின் உச்சியிலிருந்து உற்றுப்பார்த்தார்கள்.
சத்யாவும் தன் ஆசைப்படியே திருமணத்திற்குப்
பின்னும் தினமும் காலையில் வடபத்ரசாயி கோபுரத்தை தரிசிக்கிறாள். ஆனால் கோபுரத்தின்
வலப்பக்கத்திலிருக்கும் அவள் வீட்டிலிருந்தல்ல. இடப்பக்கத்திலிருந்த சேஷுவின் வீட்டிலிருந்து...
2. மைனா
- கார்த்திகேயன் சுகதேவன்
ஒத்தவாடை தெரு. அதை தாண்டியதும் ஒருக்களித்து படுத்துக் கொண்டது போல் கண்மாய்க்கரை. கரையின் மேலே ஏறாமல் பக்கவாட்டிலேயே நடந்து சென்றால் வருவது மைனருடய மாந்தோப்பு. ஆண்களுக்கு கூட அடி வயிறு கலங்கும் அதை கடந்து செல்கையில்.
ஒற்றையாக ஒரு குருவி மட்டும் யாரையோ தேடி கூவிக் கொண்டிருந்தது. தலை விரித்து கிடந்த தென்னை மரங்களின் கீற்றுகள் எதற்காகவோ பட படத்தது...
வெருக்கு... வெருக்கு... என்று எட்டி நடை போட்டாள் மைனா. காலடியில் காய்ந்து கிடந்த சருகுகளும் சேர்ந்து சுதி போட்டது. அதனடியிலே ஒளிந்திருந்த பூச்சிகள் பல சிதறி ஓடியது...
இன்னும் சிறிது தூரம் கடந்து விட்டால் போதும்... மைனருடைய மாந்தோப்பை கடந்து விடலாம்....
அந்த இனம் புரியாத ஆபத்தை தாண்டி விடலாம்….
ஆனால் கூடவே தொடர்ந்து வரும் அந்த இன்னொரு ஓசையை கேட்டதும்...
உதறி தள்ளமுடியாத நிழலாய் அது தன்னை தொடர்கின்றதென்பதை உணர்ந்ததும்…
கண்கள் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது போல ஒருவிதமான இருட்டு வந்து இமைகளை கவ்வியது...
சேத்தாளி பெண்டுகள் துணையில்லாமல் தனியாக புறப்பட்டு வந்த தன் தவறை எண்ணி நோக வைத்தது...
பின்னே தொடர்ந்து வருவது யாராக இருக்கும்....
மாந்தோப்பு காவல்காரனோ...
தன் பள்ளிக்கூடத்து சேத்தாளி பெண்டுகளோ...
அல்லது கிராமத்தில் இந்த் மாதிரியான விஷயங்களைப் பற்றி விலாவாரியாக சொல்லும் உப்பிடாரி கிழவி அடிக்கடி சொல்லும் அந்த மாந்தோப்பு முனியாக இருக்குமோ..
முனியைப் பற்றி நினைத்ததுமே தொடைகள் நடுங்க ஆரம்பித்தது... கால்கள் கிடு,கிடுவென ஆட ஆரம்பித்தது....உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமும், நடையுமாய் தொடர்ந்தாள் . அதுவும் கூடவே சேர்ந்து ஓடி வருவது கேட்டது...கால்களை அப்பிக் கொண்ட நெருஞ்சி முற்கள் வேறு உயிரை சல்லி சல்லியாக்கியது...
சேத்தாளி பெண்டுகளுடனான சண்டையில் தனியாக வந்து இப்படி ஆபத்தில் மாட்டிக்கொண்டோமே....என நெஞ்சுக்குள் அடித்த இதயத்தின் ஒலி கால்களின் ஒலியைப் போல பெருத்த சப்தமாக கேட்டது.
சின்னஞ்சிறுசுகளாக கைகோர்த்து திரிய வேண்டிய வயசில் இந்த அர்த்தமற்ற சேத்தாளி சண்டை தேவைதானா...
பெரிசுகள் போடும் அந்த அர்த்தமற்ற நீயா,நானா சண்டையில் இன்னும் எத்தனை வேதனைகள் யார், யாரைத்தான் தொடரப்போகிறதோ... .... என அந்த சப்தம் பொட்டில் அடித்தது...
மேல தெருவின் முன்னூறு குடியிருப்புகள் போக கீழதெருவில் என்பது குடியிருப்புகள் சேர்த்து முன்னூற்றி என்பது குடியிருப்புகளுக்காக அரசாங்கத்தில் கட்டிக்கொடுத்த பள்ளிக்கூடம் அது...
கீழதெருக்காரர்களோடு சேர்ந்து அமர்ந்து படிப்பதற்க்கே பிடிக்காத சில குழந்தைகளுக்கு கீழதெருக்காரர்களோடு படிப்பில் தோற்றுப்போவதில் எப்படி உடன்பாடு இருக்கும்.அதுவும் வன்மத்தை சொல்லிக்கொடுத்து வளர்க்கப்படும் பிஞ்சுகளுக்கு எப்படி அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்.
மைனாவின் அப்பனுக்கு அவன் மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென ஆசை.அதற்க்காக அவளை அந்த ஆபத்தான மாந்தோப்பையும் தாண்டி பள்ளிக்கு அனுப்புகிறான்.
ஆனால் பள்ளியில் முதலாவதாக வரும் அவன் மகளுக்கும் அவள் சேத்தாளிப் பெண்டுகளுக்கும் இதனாலேயே சண்டை வரும் என்றும், அதனால் அவர்களை விட்டு மைனா இப்படி தன்னந்தனியாக நடந்து வருவாள் என்றும் எப்படி அவனுக்கு தெரியும்...
சின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கையில் ஆத்திரமோ... கோபமோ... எதுவுமே நிரந்தரமானது இல்லை..மைனா திரும்பவும் போய் பேசினால் அவர்கள் தன் கோபத்தை மறந்து விடுவார்கள்...ஆனால் மைனாதான் தேவையில்லாமல் தன் பிடிவாதத்தை விடாமல் இப்படி தொடர்கிறாள்.
ராசக்கா...கல்யாணி மதினி....பூவரசி....வெள்ளாயி.... குருவு....என இந்த முனி அடித்து செத்துப்போன பெண்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்...
எதற்காக அவர்கள் சாக வேண்டும்?....ஏன் அவர்களை இந்த முனி அடிக்க வேண்டும்?...
பாதையின் ஓரமாக இருந்த செடியில் பஸ்கி எடுத்துக்கொண்டிருந்த ஓணான், மாடக்குளம் குஸ்தி வாத்தியாரை ஞாபகப்படுத்தியது...அது புலி பாய்வதற்கு முன்னே பதுங்குவது போல பார்ப்பதற்கே பயமாக இருந்தது...
இந்த மாந்தோப்பு முனியைப்பற்றி ஊருக்குள் பெரிசும் சிறுசுமாக எல்லோரும் சொல்லுவார்கள்... ஒத்தையாக ஒரு பெண் தனியாக மாட்டிக்கொண்டால் அவ்வளவுதானாம் .. ரத்தம் கக்க போட்டு புரட்டி எடுத்துவிடுமாம்…அவ்வளவு வெறி பிடிச்சதாம் இந்த முனி...
மயிலக்காவும் அடிக்கடி சொல்லுவாள், "குமரிப்புள்ளைக மட்டும் அது எல்லைய மிதிச்சுடக்கூடாது...குரவளையை நெரிச்சுப்போடும்...",என்று.
அதென்ன இந்த முனிக்கு குமரிப்புள்ளைக மேல மட்டும் அப்படியொரு கோவம்....?
வேடிக்கை பார்க்க வந்ததைப்போல தும்பிகள் வட்டமடித்தன... கரட்டு...கரட்டு ... என கத்திக்கொண்டிருந்த ஒன்றிரண்டு காக்கைகளும் இப்போது ஊட்டியை பிடித்துக்கொண்டு அமைதியானது.வேறு எந்தவித சப்தமும் இன்றி பின் தொடர்ந்து வரும் அந்த சப்தம் மட்டும் துல்லியமாக கேட்டது...
போச்சு....போச்சு....அதுவேதான்...இனி ஆத்தா,அப்பனுக்கு புள்ளையாகப் போய் சேர முடியாது...பொணமாகத்தான் போய் சேரப் போகிறோம்….
ராசக்கா...கல்யாணி மதினி....பூவரசி....வெள்ளாயி.... குருவு....என இந்த முனி அடித்து செத்துப்போன பெண்கள் வரிசையில் இனி தன்னையும் சொல்லுவார்கள்...
கோடாங்கி அடித்து குறி கேட்டு சாமிக்கு கோபம் குறைய கெடா வெட்டி பொங்கல் வைப்பார்கள்...
ஆத்தாளும், அப்பனும் கூட இலையை வழிச்சு நக்கி விட்டு கையை துடைத்துப் போட்டுப் போய் விடுவார்கள்.
பூவரசி, வெள்ளாயி.... குருவுகூட குமரிப்பொண்ணுக மட்டும்தான். கல்யாணி மதினியும், ராசக்காவும் கல்யாணம் கட்டி பிள்ளை பெத்தவர்கள்... கல்யாணி மதினியின் புருசன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்.அவளின் பிள்ளைகள் அம்மாச்சி வீட்டில் அத்தைக்காரி வடிச்சுக்கொட்டும் மக்கிப்போன நெல்லுக்கஞ்சிக்கு கூட தொன்னாந்து கிடக்குதுகள் பாவம்.
அவளது ஏழு வயசுப் பையன் இடுப்பில் அர்னாக்கொடியில் இறுக்கிக் கட்டிய அவனது அப்பனின் அரை நிஜாரோடு வலம் வருவான். அது அவ்வப்போது அவிழ்ந்து தொங்கும். அதை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவன் நடந்து போவதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
இந்த முனியினால் தனக்கும் அப்படி ஒரு ஈனத்தனமான முடிவு வந்து விடக் கூடாது என கால்களின் வேகம் கூடியது. தொண்டைக் குழியில் மூச்சு தத்தளித்தது....
அதுவும் சளைக்காமல் வேகம் கூட்டி ஓடி வருவது கேட்டது.
ஜெயிக்கப்போவது தானா அல்லது அந்த முனியா என்பது புரியாத பதட்டத்தில் இப்போது காற்றை கிழித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள்.... அதனது வேகமும் கூடியது...
இடுப்பளவு வளர்ந்திருந்த கோரைகள் காற்றுக்கு கூட அசையாமல் அப்படியே உறைந்து போயிருந்தது...ஓட்டம் பிடித்த மைனாவின் கால்களில் மிதிபபட்ட புற்கள் தலை தூக்கிப்பார்க்கப் பயந்து அப்படியே மண்ணோடு மண்ணாக படுத்துக்கொண்டது...
இன்னும் கொஞ்ச தூரம்... இதை தாண்டி விட்டால் ராவுத்தர் காடு... அங்கு அவ்வப்போது ராவுததரம்மா வேலையாக வரும்...அதை விட்டாலும் அடுத்ததாக செம்பூத்து ஓடை....அங்கு தண்ணீர் எடுக்க நிறைய பொம்பளைகள் வருவார்கள்... அங்கும் ஆட்கள் யாரும் இல்லையென்றால் அடுத்ததாக ஓடை தண்ணீரை தேக்கி வைத்த குளத்தில் பாய்ந்து குளிக்க வரும் சிறுவர்கள் கூட்டம்.... அதிலும் ஆள் இல்லாமல் போனால் எந்த நேரமும் யாராவது ஒருவர் படுத்து உறங்கும் கல் மண்டபம்.... எளிதில் தப்பி விடலாம்.அதன் பின் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போய் விடலாம்...
ஆனால் இனி இப்படி வரக்கூடாது...
பள்ளிக்குப் போனதும் நாமாகவே போய் பேசி விட வேண்டும்.அவர்கள் அப்பொழுதும் சமாதானம் ஆகவில்லை என்றால் வள்ளிக்கண்ணு டீச்சரிடம் சொன்னால் போதும் சரியாகிவிடும்.
இன்னும் கொஞ்ச தூரம்...
இன்னும் கொஞ்ச தூரம்...
கால்கள் கற்றாக இயங்கியது... சற்றும் ஓய்வை நினைக்காது சிட்டாய்ப்பறந்தது...
புத்தியும் மனதும் கூட புகை போக்கியிலிருந்து விடுபட்ட காற்று தறி கெட்டு கலைந்தோடுவதைப் போல ஓடியது.
தூரம் குறையக் குறைய ...
வேகம் அதிகரிக்க...அதிகரிக்க...
தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை சற்றே தலை தூக்கிய நேரத்தில் தான் அது நடந்தது...
ஓடி வந்த முனியின் உஷ்ணம் தொட்ட மைனாவின் முதுகை அதன் கைகளும் தொட்டது...
நாடி நரம்புகளெல்லாம் அப்படியே அடங்கிப்போய், "ஆத்தா… மகமாயி...அய்யனாரே....", என சரிந்து விழுந்தாள்.
அடர்த்தியாக வளர்ந்து நின்ற கோரைகள் பஞ்சு மெத்தயைப் போல அவளை வாங்கித் தன் மேல் போட்டுக்கொண்டது.
ராசக்கா...கல்யாணி மதினி....பூவரசி....வெள்ளாயி.... குருவு....என முனி அடித்து செத்துப்போன பெண்கள் அத்தனை பேரும் வரிசையாக வந்தார்கள்,மங்கலாக.
வந்து, "வாடீ... மைனா...வா....நீயும் முனிக்கு படையலாயிட்டயா ....இனிமே நீயும் எங்களோடு சேர்ந்து முனியப்பனோட வில்லு வண்டியிலே ஜல்லு,ஜல்லுன்னு ஊரை சுத்தி வரலாம்..."
"ஆமாண்டீ ... இனி உனக்கு சொர்க்கம்தான்...சாமியோட சாமியா ஆயிட்டே நீ..."என்றார்கள்.
"சாமியோட சாமின்னா .... அப்போ நான் செத்துட்டேனா..."
"சாகலைடீ...சாமியா ஆயிட்டே...."
"அய்யய்யோ .... அப்போ... இனி நான் பள்ளிக்கூடம் போவ முடியாதா...படிக்க முடியாதா...எங்க வள்ளி டீச்சர் என்னை பெரிய படிப்பு படிச்சு பெரிய வேலைக்கு போவேன்னுல்ல சொல்லியிருக்கு...அது நடக்காதா..."
"அதான் நீ சாமியாயிட்டியேடீ ... இனிமே உனக்கு எதுக்கு படிப்பு..."
"அடக்கடவுளே... இந்த முனி நம்ம தெருக்கார பொண்ணுகளை மட்டும்தான் இப்படி அடிச்சு கொல்லுமா ... மேல தெருக்கார பொண்ணுகளை ஒன்னும் பண்ணாதா... ராவுத்தரம்மா எப்போவும் தனியாத்தான் இந்த காட்டுக்குள்ளே வந்து போகுது... அதெல்லாம் இந்த முனி கண்ணுல படாதா ... "
"அப்படியெல்லாம் பேசக்கூடாது...நீதான் புண்ணியம் பண்ணியிருக்கே...அதான்..."
"புண்ணியமாம் புண்ணியம்...என் படிப்பு போச்சு...எங்க அப்பன் ஆசை பட்ட மாதிரி நான் பெரிய வேலைக்குப்போய் நல்ல பொழைப்பு பொழைக்க முடியாது...அய்யோ..அய்யோ...."
"அடிப்போடீ.. நல்ல பொழைப்புன்னா என்னடீ,,, என்னைக்காவது நம்ம தெருக்காரவுகளை இந்த ஊருல யாராவது மதிச்சு பேசியிருப்பாவளா... இப்போ பாரு ஊரே நமக்கு பொங்கலு வச்சு சாமியா கும்பிடுது.."
”வருஷத்துக்கு ஒருமுறை கோடாங்கி அடிச்சு குறி கேட்டு நம்ம குறையையெல்லாம் தீர்த்து வைப்பாக... ஆருக்காவது இந்த பாக்கியம் கிடைக்குமா....”
குப்புற விழுந்து விட்ட அவள் பாவாடை முழங்காலுக்கு மேல் ஏறி கலைந்து கிடந்தது...கைகளையும் கால்களையும் விரித்துப் படுத்து குலுங்கி குலுங்கி ஆழ ஆரம்பித்தாள்.
ஆத்திரமும்,அழுகையும் பொத்துக்கொண்டு வந்து நிலை கொள்ளாமல் புரண்டு, புரண்டு வேறு அழ வைத்தது...
“ஐய்யையோ... ஐய்யையோ... அடீ மைனா... உனக்கு என்னடி ஆச்சு... என்னடி ஆச்சு...”
- ஏதோ கனவில் கேட்பது போல கேட்டது...
மெல்ல கண்களை இடுக்கி முகத்தை உயர்த்திப் பார்த்தாள்...
மாந்தோப்பும், ஒற்றை குயிலும் பின்னணியில் தெரிய செங்கொடி அக்காதான் கலவரமாய் நின்றிருந்தாள்..
துரத்தி வந்தது முனி அல்ல... செங்கொடி அக்காதான் என்பது தெரிந்ததும் தான் உயிரே வந்தது...
“குமரிப்புள்ளைகன்னா குரவளையை நெரிச்சுப் போடும்னு மயிலக்கா அடிக்கடி சொல்லும் ... அந்த முனிதான் தொரத்துதோன்னு நினைச்சு பயந்துட்டேன்... அதான்....”, என்றாள் வியர்த்துப்போய் ….
“அடிப்போடீ… தாயைத் தாய் அடிக்குமா.... பேய்தான் அடிக்கும்...நீ எழுந்து வா”, என்றாள் செங்கொடி அக்கா…
- பெயருக்கு ஏற்றாற்போல மிகவும் தைரியமான முற்போக்குவாத பெண் அவள்.
எழுந்து கை, கால்களை தட்டி விட்டுக்கொண்டாள். அப்போதும் மிரட்சி இருந்தது.
தாயைத் தாய் அடிக்காதுதான். பின், இந்த மாந்தோப்பு ஓரமாக அடித்து கொல்லப்பட்ட பெண்களின் சாவுக்கெல்லாம் யார் காரணமாக இருப்பார்கள்.
இந்த தோப்பைத் தாண்டி தனியாக ஒரு பெண்ணை போக விடாது ஓட,ஓட எது விரட்டி அடித்திருக்கும்...
பாடத்தில் மட்டுமல்ல... வேறு எந்த விஷயத்தில் சந்தேகம் கேட்டாலும் சரியான பதில் சொல்வாள் மைனாவின் வகுப்பு ஆசிரியை வள்ளிக்கண்ணு.
இந்த மாந்தோப்பு விசயம் பற்றி ஒரு முறை பள்ளிக்கூடத்தில் வள்ளிக்கண்ணு டீச்சரிடம் கேட்டபோது "பொம்பளை இல்லையின்னா பொறப்பெடுக்க முடியுமா...இந்த முனியைப் போலத்தான் நாதியத்த காட்டுக்குள்ளே காத்தா அலையணும்...பொம்பளையை அடிச்சு கொல்லுறது சாமியா மட்டுமில்லை...மனுசனாக் கூட இருக்க முடியாது...அடிச்சது மாந்தோப்பு முனியா இருக்காது.... மாந்தோப்பு மைனராத்தான் இருக்கும்..."என்று சொல்லுவாள்.
மாந்தோப்பு… ராவுத்தர்காடு... செம்பூத்து ஓடை... பள்ளிக்கூடத்து சாலை...என வழி நெடுகிலும் செங்கொடி அக்காவும் அதையேதான் சொல்லிக் கொண்டு வந்தாள்.
அவள் மேலும் ஒன்று சொன்னாள், "முனியோ, மைனரோ... பொம்பளையை கொல்லுற சென்மத்தை ஊருப் பொம்பளைகளெல்லாம் ஒன்னாச் சேர்ந்து ஓட,ஓட விரட்டி அடிக்கணும்...."என்று.
"சீ...ச்சீ ...என்ன வார்த்தை சொல்லுறே.... முனியப்பனை அப்படியெல்லாம் சொல்லாதே...நீ சொன்னது போல கொன்னது மாந்தோப்பு முனியா இருக்காது...மாந்தோப்பு மைனராத்தான் இருக்கும்..." என்று பதறிப் போய் மறுத்தாள்.
பள்ளிக்கூடத்தில் வள்ளிக்கண்ணு டீச்சர் பாடம் நடத்தும் போது ஊர் பெண்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து யாரையோ விரட்டி ஓட...அவர்களுக்கு முன்னே மாந்தோப்பு மைனர் தலை தெறிக்க ஓடுவது போல நினைத்து, நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
அவள் நினைப்புக்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடிய மைனரின் கால்களில் நெரிஞ்சியும், காய்ந்து போன கோரைகளின் கீறல்களும் ...அந்த பெண்களோடு சேர்ந்து இன்னும் துரத்தித் துரத்தி அடிக்க... மைனர் வேட்டியைக் கூட அவிழ்த்து விட்டு ஓடினார் .....
அதை கல்யாணி மதினியின் ஏழு வயது மகன் ஒரு கையில் தூக்கிப் பிடித்த அரை நிஜாரோடு விழுந்து விழுந்து சிரித்து வேடிக்கை பார்த்தான்… மைனாவுக்கு வகுப்பு முடியும் வரை சிரிப்பு அடக்க முடியாமல் வந்துகொண்டுதானிருந்தது. வள்ளிக்கண்ணு டீச்சர் கவனிக்கவில்லை
- கார்த்திகேயன் சுகதேவன்
அலுவலகத்துக்குள் நுழைந்த சுமதி, நேராக
’ரெஸ்ட் ரூமு’க்குச் சென்றாள். இருசக்கர
வாகனத்தில் வரும் போது
தொந்தரவில்லாமல் இருப்பதற்காக
இழுத்துக் கட்டப்பட்ட தலை முடியை அவிழ்த்து விட்டாள். ’ஹேண்ட்
பேக்’கிலிருந்து சீப்பை எடுத்து லேசாக தலையை வாரிக்
கொண்டாள். கொஞசமாக ’பவுடரை ’எடுத்துப்
பூசிக் கொண்டாள்.
“லிப்ஸ்டிக் வேணுமா...”
-சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிய இடத்தில் ’ரிசப்ஷனிஸ்ட்’
சாரா நின்றிருந்தாள்.
”
நாங்கள்லாம் அதை யூஸ் பண்றதில்லை...”, என்றாள்
சுமதி.
அந்த நாங்கள்லாம் என்ற வார்த்தைக்கு, ’எங்களைப்
போன்ற குடும்பக் குத்துவிளக்குகள்’ என்ற
அர்த்தம் ஒளிந்திருப்பது சாராவுக்கும் தெரியும். இருந்தாலும் வெறுமனே ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டுச் சென்றுவிட்டாள்,சாரா.
இருக்கையில் வந்து அமரும் போது சுமதியைப் பார்த்து சாரா
மறுபடியும் சிநேகமான ஒரு புன்னகையை உதிர்த்தாள. சுமதி அதை கவனிக்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளது
பார்வையில் சாரா
ஒரு மேனா மினுக்கி. ஆண்கள்
மயக்கி. அவளைப்
பற்றி அலுவலகத்தில் பலரும் பல விதமாக சொல்வார்கள். அதனால்,
அவளைப் பார்த்தாலே பிடிக்காது சுமதிக்கு.
அவளைப்
பார்க்காதது போல முகத்தை திருப்பிக் கொண்ட சுமதி, வேலையில்
பிஸியாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.
தன் முன்னேயிருந்த டேபிளிலிருந்து ஒரு நோட் புக்கையும் பென்சிலையும் எடுத்து எதையோ கிறுக்க ஆரம்பித்தாள். சில
நொடிகள் மட்டுமே கையில் வைத்து கிறுக்கிக் கொண்டிருந்த பென்சிலைப் பார்த்ததும்தான்
அவளுக்கு அலுவலகத்துக்கு கிளம்பும்
போது பாப்பா சொல்லியனுப்பியது ஞாபகத்துக்கு வந்தது.
“வரும் போது மறக்காம பென்சில் பாக்ஸ்
வாங்கிட்டு வா...”
“ம்ம்...வாங்கிட்டு வர்றேன்... நீ ஹோம் ஒர்க்கையெல்லாம் கரெக்டா
முடிச்சு வை...“
“
நீ ஒழுங்கா... மறக்காம
வாங்கிட்டு வா...”
பேச்சுக்கு பேச்சு...பதிலுக்கு
பதிலென எப்படி ஒரு எகத்தாளம்... என்ன
ஒரு துடுக்குத்தனம்...
-சுமதி தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலுள்ளது. வெளியில்
எங்கும் செல்லாமல் அவள் கூடவேயிருந்து ரசிக்க வேண்டுமென்றுதான் ஆசையாக உள்ளது.என்ன செய்வது... எதிர்காலத்தில்
நம்மைப் போலில்லாமல் நமது குழந்தைகளும் சவுகரியமாக வாழ வேண்டுமே...அதற்காக
காசு சேர்த்தாக வேண்டுமே... ஓடி...
ஓடி... உழைத்தாக
வேண்டுமே...
“யாருக்காக சம்பாதிக்கிறோம்... நம்
குழந்தைக்காகத்தானே...”
கத்தாரில் கொளுத்தும் வெயிலில் நின்று பணிபுரிந்து பணம் அனுப்பும் அவள் கணவனும் கை பேசியில் அடிக்கடி இதே வார்த்தையைத்தான் சொல்லுவான்.
அத்தோடு, அவளை
நிறைய படிக்க வைக்க வேண்டுமென்பான்.அவளை டாக்டராக்க வேண்டுமென்பான். நல்ல
இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டுமென்பான்.
ஆறு வயதே நிரம்பிய குழந்தைக்காக யாராவது அப்படியெல்லாம் யோசிப்பார்களா. ஆனால்
பெரும்பாலான பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இப்படித்தான்
சிந்திக்கிறார்கள். சிலர்தான்
விதி விலக்காக உள்ளார்கள்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு
கண் கண்ட கடவுள்கள். வரம் தரும் தெய்வங்கள். தங்கள்
குழந்தைகளின் கனவுகளுக்காக எவ்விதமான வலிகளையும் தாங்கிக் கொள்ளும் இவ்விதமான உறவுகள் வணங்கப்பட வேண்டியவைகள்.
சற்று நேரத்தில் தொடர்ச்சியாக அலுவல்கள் வந்தது. தன்னை
மறந்து வேலையில் லயித்துவிட்டாள்,சுமதி. ஆனால்
அந்த அலுவல்களின் மத்தியிலும் எதேச்சையாக முகத்தை கைகளால் துடைக்கும் போது கைகளில் தட்டுப்பட்ட வைரமூக்குத்தி மறுபடியும் அவளைத் தன் தாய்,தந்தையைப் பற்றி யோசிக்க வைத்த்து.
தாய் வீட்டுச் சீதனமாக அவளின் திருமணத்தின் போது தரப்பட்டது அந்த வைரமூக்குத்தி.அந்த மூக்குத்தி வாங்க அவள் பெற்றோர் மாதா,மாதம் சிறுகச் சிறுக பணம் சேர்த்த கதையை சென்மத்தில் மறக்க முடியாது.கண்கள் பணித்தது.
பகல் 11.30 மணி
சுமாருக்கு ஆட்டோ, பேருந்துகள்
ஓடாதென்ற செய்தியில் திடீரென்று அலுவலகம் பரபரத்தது. அலுவலகத்தில்
பலரும் பலரிடம் ’ட்ராப்
சர்வீஸ்’ தருமாறு கேட்டுக் கொண்டார்கள். சுமதியிடம்
இருசக்கர வாகனம் இருந்ததால் யாரிடமும் அவள் உதவி கேட்கவில்லை. அந்த
அலுவலகத்தில் அவள் சேர்ந்து ஒரு வாரமே ஆகியிருந்ததால் அவளிடமும் யாரும் உரிமையாக வந்து உதவி கேட்கவில்லை.
அலுவல்களெல்லாம் கொஞ்சம் குறைந்து சற்று ஓய்வாக இருந்த போதுதான் சாராவைக் கவனித்தாள். அவள்
யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. ஆனால்,
அவள் பேருந்தில்தான் வருகிறாள். நன்றாகத் தெரியும். பிறகு
எப்படி அவள் அலுவலகம் முடிந்து வீடு செல்வாள்.
எப்படியும் போகிறாள்... நமக்கென்ன
வந்தது...
மறுபடியும் பென்சிலை எடுத்து கிறுக்க ஆரம்பித்தாள், சுமதி.
ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தாள். அவளின் தங்கநிற மேனியை கொஞ்சமாகத்தான் பார்க்க விரும்பினாள்.அடிமனதிலிருந்த
பொறாமையாகக் கூட இருக்கலாம்.
பார்த்த
மாத்திரத்திலேயே சுண்டியிழுக்கக்கூடிய பளீரென்ற சிவப்பு நிற புடவையில் படு கவர்ச்சிகரமாகத்தான் இருந்தாள்
சாரா. அந்த சிவப்பு நிறப்புடவையில், அவளது
சதைப் பிடிப்பான வெள்ளைத் தோற்றம் ஒரு சில ஆண்களை கிறங்கடிக்கத்தான் செய்தது.கிறக்கத்தில்
அவர்கள் தங்களின் அலுவலகப் பணியைக்கூட அகஸ்மாத்தாக கோட்டை விட்டதும் தெரிந்தது.
ஆம்.
அது அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கையிலிருந்த கோப்புகளை கீழே தவறவிட்டுச் சென்ற டெஸ்பாட்ச் க்ளார்க்கின் செயலில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவர் அப்படியும், “ஹி...”யென்று வழிந்து
கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றதில் ஆத்திரம் பற்றிக்கொண்டுதான் வந்தது
’என்னவொரு ட்ரெஸ்ஸிங் சென்ஸ்... எப்படியொரு
மேக் அப்...இவளை
ஆண்கள் மயக்கியென்று சொல்வதில் தவறேயில்லை...
-கோபம் கொப்பளித்தது, சுமதிக்கு.
மாலை நாலரை
மணிக்கு ஒரு கை பேசி அழைப்பு வந்தது சாராவுக்கு.
“கவலைப் படாத பாப்பா... அம்மா
கால்டாக்சி புடிச்சாவது சீக்கிரமா வந்துடுவேன்... சரியா...”,
என்றாள் சாரா.
மறுமுனையில் பாப்பா ஏதோ கேட்டிருக்க வேண்டும்...
”ஓகேடா பாப்பா... வரும்
போது கண்டிப்பா பென்சில் பாக்ஸ் வங்கிட்டு வர்றேன்... சரியா...”,
என்றாள் சாரா.
சுமதி சட்டென்று அவளை நிமிர்ந்து
பார்த்தாள்.நீயும் அந்த
வரம்தரும் கடவுள்தானா...சராசரித் தாய்தானா... என்றாள்
கண்களாலேயே.
சாராவும் சரியான நேரத்தில் சுமதியைப் பார்த்தாள். பின்
சற்றே தயக்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டாள், ஒரு
மெல்லிய சிரிப்போடு.
அந்த சிரிப்பில் ஒருவித கனிவு இருந்தது...
நட்பு இருந்தது...
எவ்விதமான
கேள்விகளையும் எளிதாக எதிர்கொள்ளும் தெளிவான எதிர்நோக்கு திறன் தெரிந்தது..
.
ஒரு ரிசப்ஷனிஸ்ட்டுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியமான மனோபாவம் அது.
இவ்வளவு நேரமாக அதைப்
பற்றி யோசிக்காது போய் விட்டோமே...
சர்வசாதாரணமாக அவளுக்கு ஏதேதோ பொய் முகங்கள்
கட்டிப் பார்த்துவிட்டோமே...
-சுமதிக்கு வேதனையாகத்தான் இருந்த்து.
ஒரு சாதாரண அக்கவுண்ட்ஸ் மேனேஜரான தனக்கே நேரத்திற்கொரு சிகையலங்காரமும், ஒப்பனைகளும்
தேவைப்படும்போது ஒரு நாளில் பல புதிய முகங்களை சந்தித்து பணிவிடை செய்யவேண்டிய இடத்திலுள்ள ஒரு ரிசப்ஷ்னிஸ்ட் எந்நேரமும் பளிச்சென்று இருக்க நினைப்பதில் என்ன தவறு...
ரெஸ்ட் ரூமில் அவள் “லிப்ஸ்டிக்
வேணுமா...” எனக்
கேட்டதற்கு தவறான பதிலைச் சொல்லிவிட்டோமே...என மிகவும் வருத்தப்பட்டாள்.
பின், ”என்னோட
டூ வீலர்ல வர்றீங்களா... நான்
ட்ராப் பண்றேன்... போகும்போது
எனக்கும் ஒரு பென்சில் பாக்ஸ் வாங்கணும்...”, என்றாள் சாராவைப் பார்த்து சுமதி.
4. நாச்சம்மை வீடு
4. நாச்சம்மை வீடு
- கார்த்திகேயன் சுகதேவன்
மெய்யப்பண்ணா
வந்துவிட்டான். டாலஸிலிருந்து ஃப்ராங்க் ஃபர்ட். ஃப்ராங்க் ஃபர்டிலிருந்து சென்னையென
பறந்து, பறந்து வந்து சென்னையிலிருந்து ஒக்கூருக்கு சொகுசுக் காரில் வந்து எங்கள் நாச்சம்மை வீட்டில் அவன் இறங்கியபோது சொந்த பந்தமெல்லாம்
பர,பரத்தது.
ஆச்சியும்,அய்த்தானும்
வாயெல்லாம் பல்லாகிப்போனார்கள். தம்பியொண்டிக்கு கூட சந்தோஷம் தாளவில்லை. இருக்காதா,
பின்னே... மெய்யப்பன் போடப்போகும் அந்த கையெழுத்துக்கு முள்ளங்கிப் பத்தையாய் மூன்றுகோடி
ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைக்கப்போகிறதே...
எல்லோரும் பேசி
முடிவு செய்தபிறகு நாச்சம்மை வீட்டை விற்கவேண்டுமென
நான்தான் முதலில் மெய்யப்பண்ணாவுக்கு ஃபோன் செய்து கேட்டேன்.
"அண்ணே...
நம்ம நாச்சம்மை வீடு ரொம்ப பழசாகிடுச்சுண்ணே... சுவரெல்லாம் கூட உளுத்துப்போச்சு...”
”அதுக்கு...”
”ஆச்சியும், அய்த்தானும்
வித்துப்போடலாமுன்னு யோசனை சொல்லுறாக...”
”காரைக்குடியில
அவரு வூடுமட்டும் நல்லாருக்குதாம்மா... ஏன் அதைப்போயி விக்கட்டுமே இவரு...”
”அதில்லைண்ணே...
ஆளு பேரு அதிகமில்லாம இதை பராமரிக்கறதே சிரமமாயிருக்கு... அவரு சொல்லுறதும் ஓரளவுக்கு
நிசந்தானே..”
”வேணுமின்னா இன்னும்
ஆயிரம், ரெண்டாயிரம் அதிகமா அனுப்பி வைக்கறேண்டா... அதை வச்சு பார்த்துக்கிடலாமே...”
”இல்லைண்ணே...
வெறுமனே காசு மட்டும் செலவு செய்துக்கிட்டு ஏன் வச்சுக்கணும்கறா நம்ம தம்பியொண்டி...
அவ சொல்லுறதும் நியாயம்தானே... இந்த வீட்டாலே யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க...”
”அது நம்ம முப்பாட்டனார்
நம்ம முப்பாட்டியோட ஞாபகமா அவுக பேருல கட்டின வீடுடா... நம்ம பாரம்பரிய கவுரவம்டா...”
”நானும் அப்படித்தான்
சொன்னேன். ஆனா வயிறு கூழுக்கு அழும்போது, கொண்டை பூவுக்கு அழுவுமாங்கறா தம்பியொண்டி...
உண்மையாவே அவனும் ரொம்ப கஷ்டப்படத்தாண்ணே செய்யுறான்...”
எதிர்முனையில்
எந்த பதிலும் இல்லை. அதன்பிறகு அண்ணன் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு பேசவே முடியாமல்
நின்றுவிட்டானென்று அண்ணமுண்டி பிற்பாடு ஃபோனில் பேசியதிலிருந்துதான் தெரிந்தது எனக்கு.
நெடுநாள் போராட்டத்திற்குப் பிறகுதான் மெய்யப்பண்ணா
இதற்கு ஒத்துக்கொண்டான். அதற்காகத்தான் அவன் இப்போது டாலஸிலிருந்து ஒக்கூர் வந்திருக்கிறான்.
அண்ணமுண்டி ஒரு
சுற்று பெறுத்துவிட்டார்கள். மெய்யப்பண்ணாவும்தான். அவனது இரண்டாவது பிள்ளை சரவணனுடன்
எங்கள் வீட்டு வாண்டுகள் ஓடிப் போய் ஒட்டிக்கொண்டதுகள்.
சரவணன் வாஞ்சையாக
குழந்தைகளை அணைத்துக்கொண்டான்.
என்னைப் பார்த்து,
”ஹாய் சித்தப்பா...” என்றான்.
கரைச்சான் மண்டையும்,
கடுக்கனுமாக இருபத்தைந்து வயதில் பார்த்த மெய்யப்பண்ணாவை மாடர்னாக பார்ப்பது போலிருந்தது,
அவனைப்பார்க்கையில்.
”ஹாய்... ஹவ்
ஆர் யூ...”, என்றேன்.
”நல்லாருக்கோம்
சித்தப்பா...” என்றான்.
நன்றாக தமிழ்
பேசினான். அவன் பேசப்போகும் ஆங்கிலத்துக்காக காத்துக்கொண்டிருந்த என் குழந்தைகளுக்குத்தான்
ஏமாற்றமாகப் போய்விட்டது.
”நல்லா தமிழ்
பேசறேடா...”
”தமிழ் கடல் கடந்தும்
நல்லாத்தாண்டா வாழுது...”, என்றான் மெய்யப்பண்ணா.
”சந்தோஷம்...”
”காப்பி குடிக்கிறீயளா...”
- ஆச்சி கேட்டாள்.
”இருக்கட்டும்...
பொறவு குடிக்கலாம்... ”
”உட்காருங்க...”
அய்த்தான் ஏற்கனவே
வாட்டர் கூலர்களை வரிசையாக முன் வைத்து அமர்வதற்கு சொகுசு நாற்காலிகளை பட்டாலையில்
தயார் செய்து வைத்திருந்தார்.
ஆச்சி அரக்க,
பரக்க ஓடிப்போய் தன் சேலை முந்தானையில் அவைகளை மெப்பனைக்குத் துடைத்தாள்.
”போதும் செல்லம்மை... நாங்க உட்காருதோம்...” என்றபடியே அங்கு போய் உட்கார்ந்தான்
மெய்யப்பண்ணா...
மெய்யப்பண்ணாவுக்குத்
தெரியும்... அந்த உபசரிப்பில் பாசமும் இருக்கிறது... பணம் கைக்கு வரப்போகிறதென்ற சந்தோஷமும்
இருக்கிறதென்று.
என்ன செய்ய...
பணம் எல்லாம் செய்யுமே... காசு கொடுக்கப் போகும் கவுரவமும், அந்தஸ்தும், இனி காலத்துக்கும்
கூட வருமே... சொகுசாக படுத்துக்கொண்டே வாழலாமே...
அப்பத்தா சிறு
வயதில் சொன்ன பல வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறது...
அதில் ஒன்று,
“குந்தித் தின்றால் குன்றும் மாளும்...” என்ற சொலவடை. அப்பத்தா அது போல நிறைய சொல்லும்.
எங்கள் வமிசத்து
ஆட்கள் படுத்து அனுபவிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கக்கூடாதாம். பத்து பைசாவைக் கூட
கெட்டியாகப் பிடித்து வைக்கத் தெரியவேணுமாம்... இதை ஆத்தாளுக்கும் அப்பத்தா அடிக்கடி
சொல்லும்.
நாம் சேமிக்கும் காசு நமது கண்ணுக்குப் பின் நமது
சந்ததிகளுக்குப் போய்ச்சேரவேண்டுமாம். அதை கவனமாக பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது மூத்தாரின்
கடமை என்பது அவளது எண்ணமாக இருந்திருக்கலாம்.
இல்லையென்றால்
இவ்வளவு சேர்ந்திருக்குமா...
பரம்பரை, பரம்பரையாக
ஓடி, ஓடி சேர்த்த காசு இது. வாழ்ந்த தலைமுறை இனி வாழப்போகும் தலைமுறைக்காக செய்த தியாகம்
இது.
அவர்கள் வழியிலேயே நாமும்
நமது சந்ததிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அவர்கள் வாழ்ந்த
வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
மூத்தவன் பழனியப்பன்
வரவில்லை. அவன், அமெரிக்காவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து காதல் திருமணம் செய்துகொண்டு
அங்கேயே செட்டிலாகிவிட்டான். அண்ணமுண்டி அது விஷயமாய் ஒரு நாள் போனில் பேசியதைக் கேட்டுத்தான்
அப்பச்சி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்தார் சாய்வு நாற்காலியில்.
மெய்யப்பண்ணா
வந்ததில் வீடே குதூகலப்பட்டிருந்த அந்த வேளையிலும் எந்தவிதமான அசைவுகளுமின்றி அப்படியே
கிடந்த எங்கள் வீட்டின் இன்னொரு ஜீவனையும் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தியே ஆகவேண்டும்.
அது வேறு யாருமில்லை. எங்கள் ஆத்தாதான் அது.
ஆண்களெல்லாம்
ஒன்றாகக் கூடிப் பேசும் இடம் பட்டாலை. அரண்மனையைப் போலிருக்கும் எங்கள் வீட்டில் எந்த
விஷேசம் நடந்தாலும் அங்கிருந்துதான் அது தொடங்கும். வீட்டிற்குள்ளேயே மிக உயரமாக இருக்கும்
இடம் அந்த பட்டாலை. அங்கு போடப்பட்டிருந்த அந்த சாய்வு நாற்காலியில்தான் எங்கள் அப்பச்சி
அன்று அப்படிச்சரிந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு அதில் அமர்ந்தபடியேதான் அவர் தன்
உயிரையும் விட்டார். அன்றிலிருந்து ஆத்தாவும் அந்த சாய்வு நாற்காலியில்தான் ஸ்மரணையின்றிக்
கிடக்கின்றாள்.
மெய்யப்பண்ணா
குடும்பத்துக்கு போடப்பட்ட இருக்கைக்கு சற்று அருகில்தான் ஆத்தாவும் அமர்ந்திருந்தது.
ஆத்தாவுக்குத்
தெரியுமா..., மெய்யப்பண்ணா வந்ததும், அவன் எதற்காக ஒக்கூருக்கு வந்திருக்கிறானென்றும்.
மருத்துவர்கள்
ஆத்தாவுக்கு நினைவு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவளுக்கு விருப்பம் இல்லாதபடியால்தான்
அப்படிப் பேசமறுத்துக் கிடக்கிறாளென்றும் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அந்த நம்பிக்கையில்லை.
அந்த தைரியத்தில்தான் வீட்டை விற்க முடிவு எடுத்தோம்.
”ஆத்தாகிட்ட பேசட்டுமாடா...”
- மெய்யப்பண்ணா
மருகிப்போய் நின்றான்.
யாரும் பதில்
பேசவில்லை. பொல, பொலவென கண்ணீர் விட்டான். மனசு பொறுக்கவில்லை. எனக்கும் அழுகை வந்தது.
அவ்வளவு நேரமும் சந்தோஷமாக இருந்த ஒட்டுமொத்த குடும்பமும் இப்போது துவண்டு போனது.
நான் அழுதபோது
அழுது... நான் சிரித்தபோது சிரித்து... எனக்காக
வாழ்ந்த என் சொந்தமே... உன்னைவிட வேரென்ன வேண்டுமெனக்கு...
நாளைக்கு காலையில்
ரிஜிஸ்ட்ரேஷனுக்கு சொல்லியிருக்கிறார் அய்த்தான். பார்ட்டி பணத்தோட வந்துடுவானாம்.
மறுநாள் காலையில ரிஜிஸ்ட்ரேஷன் என்பதால் இன்றைக்கு மதியம் சாப்பாடு ஆனதுமே கண்ணாத்தாள்
கோவிலுக்கு போகவேண்டுமென ஏற்கனவே அண்ணமுண்டி ஃபோனில் எங்களுக்கு சொல்லியிருந்தார்.
ஆகவே மாலையில்
கோவிலுக்கு போகும்போது சாப்பிடுவதற்கு பலகாரங்களெல்லாம் தயாராகிக்கொண்டிருந்தது.
இந்த பலகாரங்களைப்
பற்றிச் சொல்லும்போது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
அப்போது ஆத்தா
கந்தரப்பம், கருப்பட்டி பனியாரம், சீப்புச்சீடை, உக்கரை, வெள்ளைப்பனியாரம், பால்பனியாரம்,
தேன்குழல், கவுனியரிசி, மனகோலம் போன்ற இன்னும் பிற அயிட்டங்களும் வித, விதமாக நிறைய
செய்து தரும்.
அடுப்படிக்குப்
பக்கத்தில் பலகாரங்களுக்கு மாவு தயார் செய்வதற்காக குந்தாணிக்கல், அரவைக்கல் என்றிருக்கும்.
இது போக இட்டிலிக்கும், தோசைக்கும் மாவு எடுக்க ஆட்டுக்கல்லும், சட்டினிக்கு அம்மிக்கல்லும்
இருக்கும். தடுக்கி விழுந்தால் இதில் ஏதேனும் ஒன்றில் விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ள
வேண்டியதுதான்.
குழந்தைகளெல்லம்
ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது எதற்காகவோ கோபத்தில் ஆச்சி என் தம்பியை அந்த ஆட்டுக்கல்லில்
பிடித்து தள்ளிவிட்டது. அதில் மோதிய தம்பி கண்ணப்பனுக்கு லேசாக தலையில் அடிபட்டுவிட்டது.
"அய்யய்யோ...
எலே சின்னவனே... ஆத்தாகிட்ட சொல்லிடாதடா... நான் உனக்கு பலகாரம் எடுத்து தாரேன்டா...”
என்றாள் ஆச்சி பதறிப்போய்.
”எனக்கு...”
- மெய்யப்பனும்,
நானும் கூடச்சேர்ந்து கேட்டோம்.
ஆச்சி வேறு வழியில்லாமல்
எல்லோருக்குமாக சேர்த்து பலகாரத்தை எடுத்து வந்து தந்தது. அதற்கு முன்,
”ரத்தம் வருதே...
எப்படி நிறுத்தறது...”
”காப்பித்தூளை
எடுத்து வெச்சா சரியாயிடும்... வீட்டு இண்டு, இடுக்குகள்ல ஒட்டியிருக்கற நூலாம்படைகளையும் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க...
அதையும் வச்சா நல்லது...”
என தம்பியின்
தலையில் ஏற்பட்ட காயத்துக்கு கொஞ்சம் காப்பிப்பொடியும், நூலாம்படையும் எடுத்து வந்து
வைக்கப்பட்டது.
உசரமான மர பீரோவின்
மீது கொட்டானிலும், மங்குச்சாமானிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பலகாரங்களை
ஆத்தாவுக்குத் தெரியாமல் ஸ்டூலைப் போட்டு எடுப்பதற்கான தைரியமும், உசரமும் ஆச்சிக்கு
மட்டும்தான் உண்டு.
ஆனால் பிள்ளைகளுக்கு
தலைக்கு எண்ணெய் தடவி விடும்போது ஆத்தா தம்பிக்கு அடிபட்டதையும், ஆச்சியின் திருட்டுத்தனத்தையும்
கண்டுபிடித்துவிட்டது.
அப்பாவிடம் ஒரு
பழக்கம் உண்டு. கோபம் வந்தால் பெல்டை எடுத்து விளாசி விடுவார். அன்றும் அப்படித்தான்
அது முடிந்தது.
வீட்டில் எல்லோரும்
கண்ணாத்தா கோவிலுக்குச் சென்றபின் நானும் என்
மனைவியும் மட்டும் ஆத்தாவுக்குத் துணையாக வீட்டிலேயே இருந்தோம்.
ஆத்தா ஏதோ முனகும்
சப்தம் கேட்டது.
”ஆத்தா... என்னத்தா
வேணும்...”, என்றேன் அருகில்போய்.
”கண்ணப்பன் சாப்பிட்டானா...”
அவள் என் தம்பியைப்
பற்றித்தான் கேட்கிறாள்.
”ம்ம்... சாப்பிட்டான்
ஆத்தா...”
”மூத்தவன் சீமைக்குப்
போயிட்டான்... சின்னவன் அயித்தமவ வாலைப்புடிச்சுக்கிட்டு திரியுறான்... இந்த மங்குனிப்பயலுக்கு
ஆருலே இருக்காக...”,என்று ஆத்தா அழ ஆரம்பித்துவிட்டது.
”நீ கவலைப்படாதே
ஆத்தா... அவனுக்கும் ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடலாம்...”, என்றேன் நான்.
நான் என் அயித்தை மகளான என் மனைவியை காதலித்தது மட்டும்தான்
ஆத்தாளின் ஞாபகத்தில் உள்ளது. எங்களுக்கு கல்யாணம் ஆனதும், அதன்பின் தம்பிக்கும் ஆனதும்
அவளுக்கு அவ்வப்போது மறந்துவிடுகிறது.
இந்த வீடு காதலையும்,
கல்யாணத்தையும் மட்டும் கண்ட வீடு இல்லை. எவ்வளவோ கஷ்ட, நஷ்டங்களையும் கண்ட வீடு.
எல்லா நேரங்களிலும்
எங்களோடு கூட வந்த இன்னொரு சொந்தம் இந்த வீடு...
அதனால்தான் இதை
இப்படி அனாதரவாக விட்டுச்செல்வதை நினைத்து; ஏதோ சொந்தத்தையே விட்டுப் போவதைப் போல வலிக்கிறது...
திரும்பிய பக்கங்களெல்லாம்
ஞாபகச்சுவடுகளும்... பட்டுத் தெறித்து எதிரொலித்த எங்கள் சொந்தங்களின் குரல்களும்...
ஒவ்வொரு சுவர்களுக்கும் சொந்தமாக கண்முன்னே நின்று மனதை அரிக்கிறது.
ரத்தத்தின் ஒவ்வொரு
செல்களும் வேதனையைச் சுமந்து அழுகிறது, சத்தியமாக...
ஆனாலும் நிறுத்தத்தான்
முடியுமா இதை...
காலத்தின் கட்டாயம்...
மாறும் சூழலுக்கேற்ப
மாற்றிக்கொண்டு போகவேண்டிய நிர்ப்பந்தம்...
என்ன செய்வது...
மறுநாள் பொழுது
விடிந்தது. ஆதவன்கூட சற்றே அழுது வடிந்துதான் மேக மூட்டத்தினிடையே மெலிதாக எட்டிப்பார்த்தான்.
”ஏங்கறேன்...
”
”ம்ம்... “
”உங்களைத்தான்...”
”ம்ம்...” என்று
மறுபடியும் ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்னேன்.
எனக்கு நெஞ்செல்லாம்
கனத்திருந்தது.
”உங்களிட்டதான்
கேட்கறேன்... ”
-என் மனைவி காப்பித்தம்ப்ளரும்,
டபராவுமாக நின்றிருந்தாள்.
“என்ன வேணும்...
சொல்லு...”
”நம்மூரு சசிவர்ண
பிள்ளையாரை ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுவோமா...”
”ம்ம்...”
”வேற வழியே இல்லையா...
”
”இல்லையாம்...
மனையடி சாஸ்திரப்படியே ஒரு வீட்டுல மூனு தலைமுறைகளுக்கு மேல வாழக்கூடாதாம்... ஜோஸியக்காரரு
சொல்லுறாரு...”
”உங்க அய்த்தான்
சொல்லச்சொல்லி காசு கொடுத்திருப்பாரு... அவருக்கு காசு ஆசை... “
”சத்தம் போட்டு
சொல்லாதே... ஆச்சி காதுல விழுந்துடப் போவுது... பொறந்த மவ வேதனைப்படக்கூடாது...“
”ம்க்கும்...
எங்க ஆத்தாளுக்கு உங்க ஆத்தா கொடுத்த மரியாதையெல்லாம் மறந்துடுச்சோ...”
”நேரம்கெட்ட நேரத்துல
கண்டதைப் பேசாதே... சம்பந்தியா சண்டை எல்லா வீடுகள்லயும் இருக்கறதுதான்...”
”சரி அதை விடுங்க...
உங்க பங்காளி நாச்சியப்பன் வீட்டுல என்ன நடந்துச்சு... பழங்காலத்து வீடு... உத்திரம்
இடிஞ்சு விழுந்து அவுக அப்பச்சியே செத்துப்போனாரு... அதுக்காக வித்துட்டா போயிட்டாக...
இடிச்சு அப்பார்ட்மெண்டு கட்டி ஒவ்வொருத்தரும் அதே இடத்துல வாழலையா...”
”.... ....
....”
”இனி எப்போ, எங்கே
இதுகள்லாம் ஒன்னா கூட முடியும்...”
”.... ....
....”
”எனக்கு மட்டுமில்ல...
உங்க அண்ணமுண்டிக்கும் கூட இது பிடிக்கலை...”
”அதுக்கு நாம
மட்டும் புலம்பி என்ன ஆகப்போவுது....”
”பிள்ளைகள்லாம்
இந்த நாச்சம்மை வீட்டை விட்டுட்டு சின்ன வீட்டுக்கு எங்களை கூட்டிட்டு போகப் போறீயாம்மான்னுதுக...
சின்ன வீட்டுல இதைப் போல ஓடியாட முடியுமான்னு கேட்குதுங்க... நான் என்ன பதில் சொல்லமுடியும்
சொல்லுங்க... ”, என்றாள்.
நான் எதுவும்
பேசவில்லை. எனக்கும் பதில் தெரியவில்லை...
”எங்க அப்பாவுடைய
காலத்தில ஆத்துத்தண்ணி கிடைச்சது... என்னோட காலத்துல கிணறு கிடைச்சது... உம்புள்ளைக
காலத்துல அதுகூட கிடைக்குமா தெரியாதுடா...” என்பார் எங்கள் அப்பச்சி.
தீர்க்கதரிசி
அவர். இப்போது நாங்கள் போகப்போகும் புதுவீட்டில் போர் தண்ணிதான். என் பிள்ளகளுக்கு
தண்ணி எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது. அவர்களுக்கு இந்த நாச்சம்மை வீடும், எங்களின்
கூட்டுக்குடும்ப கலாச்சாரமும்கூட அதைப்போல மறந்துபோனாலும் போய்விடும்....
காலம் அவர்களுக்கு
அப்படியொரு பாடத்தை சொல்லிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
வீட்டில் பிள்ளைகளெல்லாம்
எழுந்துவிட்டார்கள் போல... ஒன்றுக்கொன்று ஓடிப்பிடித்து விளையாடும் சப்தம் கேட்டது.
இனி நடக்கப் போவது தெரியாமல் அந்த வீட்டை அரக்க,
பரக்க வலம் வந்ததுகள் அந்த சிறுசுகள். இனி இச்சப்தம் இந்த வீட்டில் கேட்காது. இந்த
ரீங்காரம் இங்கு ஒலிக்காது... ஒவ்வொரு தூணாக, ஒவ்வொரு ஜன்னலாக பிரித்தெடுத்துப் போய்விடுவார்கள்.
சுவர்கள் கூட ஒரே நாளில் நொறுக்கப்பட்டுவிடும். தளத்தில் பதிக்கப்பட்ட பட்டியக்கற்கள்
பார்த்துப் பார்த்து பெயர்த்தெடுக்கப்பட்டுவிடும். முகப்பும், வளவும், ஆல்வீடும், பல
அடுக்குகளும் கொண்ட எங்கள் நாச்சம்மை வீடு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இங்கு
இருக்காது. வெட்ட வெளியாகிவிடும். இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடும்...
பல தலைமுறைகளின்
பாசத்தைக்கண்ட இந்த வீடு இனி இல்லாது போய்விடும்...
காலம் கடந்தும்
பழைய வரலாறுகளை ஞாபகப்படுத்தும் இந்த நினைவுச்சின்னம் இனி மண்ணோடு மண்ணாகிவிடும்...
எங்கள் நாச்சம்மை
வீட்டிற்கு ஏற்படப் போகும் முடிவு பற்றி நான் அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது....
அது தன் ஒவ்வொரு
இலைகளாய் இழந்து, தனிமரமாய் வெயிலில் தகிக்கப் போவதாய் நான் எண்ணிக் கொண்டிருக்கும்
போது....
பட்டாலையில் மெய்யப்பண்ணாவின்
குரல் திடீரென்று அலறிக் கூப்பாடு போட, ‘என்ன, ஏதென்று...’ அங்கு கூடிய ஒட்டு மொத்த
குடும்பமும் உறைந்து போனது.
காரணம், பட்டாலையில்
ஒத்தையாக ஈஸி சேரில் சாய்ந்திருந்த எங்களின் பாசத்திற்குரிய ஆத்தா இறந்துவிட்டது....
உடம்பும், உயிருமாய் வாழ்ந்த இந்த வீட்டின் மண்ணிலேயே உயிரை விட்டு, இங்கேயே உயிராய்
கலந்துவிட்டது.
ஆம், இந்த நாச்சம்மை
வீட்டை விட்டு வேறு எங்கு போகும் அந்த உயிர்...???.
மருத்துவர்கள்
சொன்னதெல்லாம் உண்மைதான். ஆத்தாவுக்கு நினைவு இருந்திருக்கிறது. இந்த நாச்சம்மை வீடு
எங்கள் கையை விட்டு போவது அதற்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் எங்களுக்கு முன்னேயே
இதே இடத்தில் அது தன் உயிரை விட்டுவிட்டது.
எங்கள் ஆத்தாளை
நாங்களே கொன்றுவிட்டோம்....
எனக்கு அடிவயிற்றில்
பகீரென்றது!.
No comments:
Post a Comment