என் அன்பு மகள் ஜெய்ஸ்ரீ ஒருநாள் தன் ஆசிரியை சொன்னதாகச் சொன்னதொரு தகவல்தான் கீழுள்ள குட்டிக்கதை.
1. உழைப்பு
- கார்த்திகேயன் சுகதேவன்
காலையில் மொட்டை
மாடியில் நின்று பல் துலக்கும்போது அவ்வளவு அருமையாக இருந்தது அந்த காலை நேரக் காட்சி.
”காலையிலே சூரியன்
உதிக்கறச்சே பறவைகள் சத்தமும், குயிலோட பாட்டும் பின்னணியிலே சேர்ந்து கேட்கும்போது
அந்தக் காட்சி எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியாம்மா...”, என்றேன் என் மகள் ஜெய்ஸ்ரீயிடம்.
”குயிலோட பாட்டு
எனக்கு பிடிக்கும். அதோட கூடு எனக்கு பிடிக்காது”, என்றாள் என் குழந்தை ஜெய்ஸ்ரீ.
”ஏம்மா...”
”அது காக்காவோட
கூடு... அதோட கூட்டிலதான் குயில் போய் வசிக்குமாம். அடுத்தவங்க உழைப்போட பலனை நாம தட்டிப்
பறிக்கக் கூடாதுன்னு எங்க வள்ளிக்கண்ணு டீச்சர் சொல்லியிருக்காங்க...”, என்றது என்
குழந்தை.
அட!. என்னவொரு அற்புதமான வார்த்தை. உதிர்ந்த இலைகள்
மண்ணுக்கு தழைச் சத்தாவது போல, உழைப்பால் சிந்தும் வியர்வைத் துளிகள்தானே கனவுகளுக்கு
பலம் தருகிறது. நமது கனவு நமது உழைப்பால் ஜெயித்தால்தானே அழகு.
அப்பாக்களின் தன்னம்பிக்கைகளையும், தைரியங்களையும், அம்மாக்களின் பிறந்த இடத்துப் பாசங்களையும் கண்டு வளர்ந்த பிள்ளைகள் ஒவ்வொருவர் பின்னேயும் இப்படியொரு கலைந்து போன கூடு இருக்கும்.
புத்திரசோகமென்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்குட்டிக்கதை தசரதன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட குறும்படத்தின் முதல்காட்சியாக யோசிக்கப்பட்டதொரு காட்சிதான்.ஆனால், இதைத் தவிர்த்து அந்த தகப்பனாரது அறிமுகத்திலிருந்தே குறும்படம் தொடங்குகிறது.
அப்பாக்களின் தன்னம்பிக்கைகளையும், தைரியங்களையும், அம்மாக்களின் பிறந்த இடத்துப் பாசங்களையும் கண்டு வளர்ந்த பிள்ளைகள் ஒவ்வொருவர் பின்னேயும் இப்படியொரு கலைந்து போன கூடு இருக்கும்.
2. கலைந்து போன கூடு
- கார்த்திகேயன் சுகதேவன்
சித்தி அப்பாவுக்காக
எங்களின் வாடகை வீட்டில் காத்திருந்தாள். நாங்கள் வீடு வாங்க வைத்திருந்த பணத்தைக்
கொடுத்து வங்கியில் ஏலத்துக்கு வந்திருந்த அவளின் அடகு நகையை அம்மா மீட்டிக் கொடுத்திருக்கிறாள்.
பின், ஒரு கட்டத்தில் எங்களுக்கே பணம் தேவைப்பட்டபோது நகையை விற்று எங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறாள்,
சித்தி. அவளது யோகத்திற்கு நகையை விற்ற அடுத்த
மாதமே தங்கத்தின் விலை கிடு, கிடுவென ஏறிவிட்டது. இப்போது எங்கள் வீட்டை விற்று தன்
தங்கத்தை திருப்பி தரச் சொல்லி அப்பாவிடம் சண்டை போட வந்திருக்கிறாள், சித்தி. வீடு
வாங்குவதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் செலவளித்த அப்பா நான்கு நாட்களாக மிதிவண்டியில்தான்
அலுவலகம் செல்கிறார். போக, வர இருபது கிலோமீட்டர் தொலைவு அவரது அலுவலகம். அலுத்துச்
சளித்து வீடு வந்த அப்பா மிதிவண்டியோடு மூச்சைப் பிடித்துக் கொண்டு ஐந்து படிகள் ஏறி
வராண்டாவில் அதை வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும், ”எங்க வீட்டை வித்துட்டோம்மா... அடுத்த வாரம் உங்களுக்கு பணம் கிடைச்சுடும்...”
என்றார்..
புத்திரசோகமென்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்குட்டிக்கதை தசரதன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட குறும்படத்தின் முதல்காட்சியாக யோசிக்கப்பட்டதொரு காட்சிதான்.ஆனால், இதைத் தவிர்த்து அந்த தகப்பனாரது அறிமுகத்திலிருந்தே குறும்படம் தொடங்குகிறது.
3. புத்திர சோகம்
- கார்த்திகேயன் சுகதேவன்.
சண்ட மாருதத்தோடு கை கோர்த்துக் கொண்டு புல்வெளிகளில் சந்தோசமாக ஓடி,ஆடுவதைப் போன்றது, அமுதூட்டும் வேளைகளில் அம்மாச்சி சொல்லும் மாயாஜாலக் கதைகள்.
சில நேரங்களில் குதூகலிக்க வைக்கும் மாயாஜாலக் கதைகளோடு சில நேரங்களில் இப்படி அழுகாச்சிக் கதைகளும் அவள் சொல்வதுண்டு.
குழைத்துப் பிசைந்த நெய்யுருண்டை சாதத்தை ஊட்டிக்கொண்டே அக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள், அம்மாச்சி.
கதையின் சுவாரஸ்யத்தில் குழந்தையின் தொண்டைக்குள் சமர்த்தாக வழுக்கிக் கொண்டு ஓடியது நெய்யுருண்டைச் சாதம்.
“ம்ம்... அப்புறம்...”
“அப்புறமென்ன... யாராலும் ஜெயிக்க முடியாத தசரத சக்கரவர்த்தி புத்திர சோகத்தில செத்துப் போயிட்டாரு... பாவம்...”
- ராமன் வனவாசம் போன கதையையும், அதன்பின் தசரதன் இறந்து போன கதையையும் சொல்லி முடித்தாள்,அம்மாச்சி.
குழந்தைக்கு அவள் கடைசியாக சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. கண்கள் அம்மாச்சியை நிலைகுத்திப் பார்க்க “புத்திர சோகம்னா என்ன...”, என்றது.
அம்மாச்சிக்கு மறுபடியும் அந்த சோகக் கதையை சொல்வதற்கு விருப்பமில்லை போலும்.சற்றே தேங்கி நின்றாள்.
அதே நேரத்தில் வரவேற்பறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி அதற்கு சரியான விளக்கம் சொன்னது.
ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விபத்தில் இறந்து போன ஒரு வாலிபனை மடியில் கிடத்திப் போட்டுக் கொண்டு அழுது கொண்டிருந்தார் அவனது தகப்பனார்.அவர் கதறி அழுத சப்தத்துக்கு குழந்தை தொலைக்காட்சியின் பக்கம் திரும்பியது.
“அதைப் பார்க்காதே...”
- அம்மாச்சி குழந்தையின் கண்களைப் பொத்தினாள்.
ஆனாலும் குழந்தை விரலிடுக்கின் வழியாக அதைப் பார்த்து உறைந்து போனது.பின், “கொஞ்சம் மெதுவா வண்டியை ஓட்டிட்டு வந்திருக்கலாம்... அவங்க அப்பா எப்படி அழறாரு பாரு... பாவம்ல...”என்றது.
அம்மாச்சிக்கு தொண்டை அடைத்தது.
”அதுதான் உனக்கான பதில்” எனச் சொல்ல வார்த்தை வரவில்லை, அம்மாச்சிக்கு.
No comments:
Post a Comment